... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Monday, April 9, 2012

டைட்டானிக் கப்பல்



விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
வைற் ஸ்ரார் லைன் (White Star Line
) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது.

நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தக் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் “ உயிர்காக்கும் படகுகள்” (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன.

இதற்கு மேற்கூறிய உத்தரவாதமும் அதிக எண்ணிக்கையில் இந்தப் படகுகளை ஏற்றிச் சென்றால் பயணிகளின் நம்பிக்கை கெட்டு விடும் அத்தோடு கப்பலின் அழகும் பாதிக்கப்பட்டு விடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

கப்பல் நிறவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப் பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஜரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப் புற மக்களும் பயணித்தனர்.

மேல் தட்டு முதலாம் வகுப்பில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டு வங்கிகளின் சொந்தக்காரர்கள், பரம்பரைச் செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

மலிவுப் பயணம் செய்தோர் வசதிகள் குறைந்த கப்பலின் அடிப்பாகத்தில் பயணித்தனர். ஜரோப்பிய மதக் கலவரங்கள், வேலை நிறுத்தம் செய்ததற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர்.

லெபனோன், சீரியா (Lebanon, Syria) போன்ற மத்திய கிழக்கு நாட்டவர்களும் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து சென்றனர். பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், டென்மார்க், குரோசியா, ஜேர்மனி போன்ற நாட்டவர்களும் புதிய வாழ்வைத் தேடிச் சென்றனர்.

பெருமளவு உயிரிழப்பிற்கு உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக் கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது. வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும்.

அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட்டானிக் கப்பல்களுக்கு அனுப்பின ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எச்சரிக்கைகள் வீணாகின.

பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில் நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது.

இதனால் இறுதி நேரத்தில் பனிப் பாறையுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன நவீன தொழில் நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது. எங்கோ ஒரு இடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணிக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. இந்த விபத்து பற்றி ஆய்வு நூல்கள், மேடை நாடகங்கள், திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.

கப்பல் மூழ்கிய 29 நாட்களில் ஒரு பத்து நிமிடப் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பிரதம பாகத்தில் நடித்தவர் 22 வயது நடிகை டொறித்தி கிப்சன் ( Dorothy Gibson) இவர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து காப்பாற்றப்பட்டவர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது “முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்” (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப்பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை.

சில ஆண்கள் பெண்களையும் சிறுவர்களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன.

டைட்டானிக் மூழ்கிச் சரியாக ஒரு நூற்றாண்டாகிறது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அவை ஒரே இடத்தில் நிற்காமல் மிதக்கின்றன அவற்றின் பெரும் பகுதி நீர் மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன.

பனிப்பறைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு வர்ணம் பூசப்படுகின்றன. அவற்றின் மீது குண்டு வீசித் தகர்க்கப் பட்டுள்ளன. றாடர் திரை மூலமாகவும் செய்மதி மூலமாகவும் பனிப் பாறைகள் அவதானிக்கப் படுகின்றன.

ஆனால் வருடமொன்றுக்குச் சராசரி இரண்டு மோதல்கள் நடக்கின்றன. பெப்ரவரி – யூலை மாதங்களில் ஆபத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. ஜனவரி 1959ல் 95 பயணிகளோடு ஒரு கப்பல் மூழ்கியது. ஆனால் அந்தப் பக்கத்தில் சென்ற இன்னொரு கப்பல் அவர்களைக் காப்பாற்றியது.

மூழ்கடிக்க முடியாத கப்பல் இன்னும் கட்டப்படவில்லை. வீழ்ந்து நொருங்காத விமானம் இன்னும் உருவாக்கப் படவில்லை. வெடித்துச் சிதறாத அணு உலை இன்னும் நிறுவப்படவில்லை. பனிப் பாறை ஆபத்தும் இன்னும் நீங்கவில்லை.


>

No comments:

Post a Comment